#BREAKING : விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது..!!
விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ஆம் தேதி காணாமல் போன நிலையில், அடுத்த நாள் 11ஆம் தேதி பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் இன்றுடன் 9 நாட்களாகியும் குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்காத நிலையில், மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பலரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சந்தேகிக்கப்படுபவர்களில் 5 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும், அந்த கிராமத்தில் வீடு வீடாக சோதனை மேற்கொண்டும் கூட, இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் மகேஸ்வரர் தயாள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு வருகை தந்து அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கிராமத்தின் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் சென்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர். அதன் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டுபிடித்ததில், அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்மநபரால் திருடி கொண்டுவரப்பட்டது என தெரியவந்தது. மேலும் அந்த இருசக்கர வாகனம் திருடு போனதாக காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, யார் அந்த மர்ம நபர்? அந்த காட்டுப்பகுதிக்கு அவர் எதற்காக வந்தார்? அவருக்கு கிராம மக்கள் யாரேனும் உதவி செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான்.. இவன் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.இது குறித்து நெல்லை சரக டிஐஜி சரவணன் கூறுகையில், ''இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.