×

#BREAKING : இரண்டு தொகுதிகளிலும் விஜய் வேட்பு மனு ஏற்பு...ஆனாலும் ஒரு சிக்கல்!

 

நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், பெரம்பூரில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார் . ஏப்ரல் 7ம் தேதியான இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நிலையில், அவரது ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால், தேர்தல் அதிகாரி அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார் . விஜய்யின் மனு ஏற்கப்பட்ட செய்தி, பெரம்பூர் பகுதி தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதேவேளையில், அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவின் நிலை குறித்து தற்போது வெளியாகியுள்ளது 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்த அவர், ஒரு தொகுதியில் குற்ற வழக்கை குறிப்பிடாமலும், மற்றொரு தொகுதியில் குறிப்பிட்டும் இருந்தார். மேலும், ஒரு தொகுதியில் தன்னுடைய வயது 51 என்றும், மற்றொரு தொகுதியில் 52 என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற ஐயப்பாடு ஏற்பட்டது. இதனை விஜய் சரி செய்து மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் இன்று(07-04-2026) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பெரம்பூரில் விஜயின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வேட்பு மனு பரிசீலனை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர், மின் சப்ளை வந்ததும் மனுக்கள் பரிசீலனை தொடங்கின. அப்போது விஜயின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

சென்னை பெரம்பூரை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் வேட்பு மனு ஏற்பு.பெரம்பூர், திருச்சி கிழக்கில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதால் தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியானது

விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல் :

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் உட்பட ஒட்டுமொத்தமாக 40 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், விஜய் மற்றும் ஜோசப் என்ற பெயர்களை கொண்ட மேலும் சிலரும் அங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஜி. விஜய், கே. விஜய், எஸ். ஜோசப் மற்றும் எம். ஜோசப் என ஒரே பெயரை கொண்ட 4 பேர் பெரம்பூர் தொகுதியில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் இருந்தால் அது அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற உள்நோக்கத்தோடு, எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட அரசியல் வியூகம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இத்தகைய தந்திரங்களை தவெக எவ்வாறு முறியடிக்க போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.