☰
×

#BREAKING : பிரபல நகைச்சுவை நடிகர் ரகு பாபுவின் தந்தை கிரி பாபு காலமானார்..!

 

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பிரபல நகைச்சுவை நடிகர் ரகு பாபுவின் தந்தையுமான கிரி பாபு (80) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். ஹைதராபாத் கொண்டாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவு தெலுங்கு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோரிசபாடு மண்டலத்தில் உள்ள ரவிநுதாலா கிராமத்தில் 1946-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி பிறந்த கிரி பாபு, 'ஜகமே மாயா' (Jagame Maya) என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆரம்பத்தில் கதாநாயகனாகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துத் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தார். பல தசாப்தங்களாக நீடித்த இவரது திரைப் பயணத்தில் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

'அன்னதம்முல அனுபந்தம்', 'தேவதலார தீவிஞ்சண்டி', 'கல்பனா', 'சிம்ஹ கர்ஜனா', 'மல்லேபூவு', 'மாயாதாரி கிருஷ்ணுடு', 'எர்ர மல்லேலு', 'கிருஹ பிரவேசம்', 'சட்டானிக்கி வெய்யி கல்லு', 'பசிவாடி பிராணம்', 'விஸ்வநாத நாயக்குடு', 'கில்லர்' மற்றும் 'நின்னே பெல்லாடதா' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கடைசியாக, 2023-ஆம் ஆண்டு வெளியான 'அன்னி மஞ்சி சகுனமுலே' (Anni Manchi Sakunamule) திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

நடிப்பைத் தாண்டி திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கிரி பாபு தனது திறமையை நிரூபித்துள்ளார். 'சிம்ஹ கர்ஜனா', 'மெருபு தாடி', 'இந்திரஜித்' ஆகிய படங்களைத் தயாரித்த இவர், 'ரணரங்கம்', 'இந்திரஜித்' மற்றும் 'நீ சுகமே நே கோருகுன்னா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கிரி பாபுவின் மனைவி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு காலமானார். இவருக்கு போஸ் பாபு மற்றும் ரகு பாபு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்; இவர்களில் ரகு பாபு தெலுங்கு சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். மூத்த கலைஞர் கிரி பாபுவின் மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.