#BREAKING : சென்னையில் இனி கண்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாது..!
சென்னையில் கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கவும், பார்க்கிங் விதிமீறல்களைக் கண்காணிக்கவும் எட்ஜ் ஏஐ (Edge AI) என்ற புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை பெருநகர சென்னை போக்குவரத்து ஆணையம் (CUMTA) அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான டெண்டரைத் தமிழக அரசு கோரியுள்ளது.
பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது, சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இரண்டு வரிசைகளில் (Double parking) நிறுத்துவது மற்றும் 'நோ பார்க்கிங்' பகுதிகளில் நிறுத்தப்படும் கார், பைக், ஆட்டோக்களை இந்தத் தொழில்நுட்பம் உடனடியாக அடையாளம் காணும்.
விதிமீறும் வாகனங்களின் புகைப்பட ஆதாரங்களுடன் நம்பர் பிளேட்டுகளைக் கேமராக்கள் தானாகவே ஸ்கேன் செய்யும். இதன் மூலம் டிஜிட்டல் முறையில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்குத் தானாகவே அபராதம் அனுப்பப்படும்.
கேமராவில் பதிவாகும் காட்சிகள் உடனுக்குடன் அங்கேயே பகுப்பாய்வு செய்யப்படும். இதனால் இணைய வேகம் குறைவாக இருந்தாலும் எந்தத் தாமதமும் இன்றி விதிமீறல்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்
முறையான பார்க்கிங் வசதி உள்ள இடங்களில் எந்த இடம் காலியாக (Free) உள்ளது அல்லது நிரம்பியுள்ளது (Occupied) என்பதை நிகழ்நேரத்தில் அறிய முடியும். மேலும், வாகனம் வந்த நேரம், சென்ற நேரம் மற்றும் நின்ற கால அளவு ஆகியவற்றையும் இந்த ஏஐ தொழில்நுட்பம் துல்லியமாகச் சேகரிக்கும்.