#BREAKING: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் சிறை வார்டன்கள் மூவர் கைது..!!
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் அருகே நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் அப்பகுதியில் கடை நடத்தி
வந்தார். கடந்த 9-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இவரது கடையில் தென்தாமரகுளம் போலீஸார் சோதனை நடத்தினர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இவரது கடையில் இருந்ததாகக் கூறி, சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். கடந்த 4 நாட்களாக அவர் விசாரணை கைதி என்ற நிலையில் இருந்துள்ளார்.
சிறை அறையில் நேற்று அதிகாலையில் சபரிவர்மன் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சபரிவர்மன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இத்தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காவல்துறையினர் அவரை அடித்துக் கொன்றதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கில், சிறை வார்டன்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார், திருவுடை நம்பி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்துள்ளதாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.