×

#BREAKING : பிரேத பரிசோதனை நிறைவு: தூத்துக்குடி வாலிபர் அருணாசலத்தின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு..!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (24). இவர் தூத்துக்குடி 3ஆம் மைல் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையே, டாஸ்மாக் கடை மூடிய பிறகு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை கடந்த ஜூலை 17ஆம் தேதி தென்பாகம் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 120 மது பாட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, அவரை விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த போலீசார், உடனடியாக அருணாச்சலத்தின் தாயார் பரமேஸ்வரிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

மேலும், அருணாச்சலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று  (ஜூலை 23) காலை அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் தாக்கியதாலேயே தனது மகன் உயிரிழந்ததாக அருணச்சலத்தின் பெற்றோர் குற்றம்சாட்டி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த வாலிபர் அருணாசலத்தின் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில், காலை 7.10 மணியளவில் அருணாசலத்தின் உடலுக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. 3 மாவட்ட சிறப்பு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனை தொடந்து பிரேதப் பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து குற்றவியல் நீதிமன்ற நடுவரின் விசாரணைக்குப் பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் தனது மகன கொடுத்த வாக்குமூலத்தின்படி 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாஜிஸ்திரேட்டிடம் அருணாசலத்தின் தாயார் பரமேஸ்வரி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.