☰
×

#BREAKING திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

 

திருவண்ணாமலை  அண்ணாமலையார் மலை உச்சி மீது  மகா தீபம் ஏற்றப்பட்டது.  லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சுவாமியை ஜோதி வடிவில் தரிசனம் செய்தனர்.  

உலக பிரசித்திபெற்ற, நினைத்தாலே முக்தி தரும் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.   தொடர்ந்து 10 நாட்களும் காலை, மாலை இருவேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில், மாட வீதிகளில் உலா வருவர். இதைத்தொடர்ந்து தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இன்று அதிகாலை 4 மணிக்கு  கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  இன்று ஒரே நாளில் 10 லட்சம் பேர் கிரிவலம் செய்துள்ளனர்.   பின்னர் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாலை ஆறு மணிக்கு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்  2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.  முன்னதாக அண்ணாமலையார் கோயில் 3-ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலித்தார்.  அதைத்தொடர்ந்து 5.59 மணிக்கு கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், சரியாக மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது.