×

#BREAKING : ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்சனை : மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு..!

 

ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்திவைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கூறி உள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.அப்போது இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள் ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வழக்கின் விவரம் :

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தனிக்கை சான்றிதழ் கேட்டு தயாரிப்பு நிறுவனம் 2025 டிச.18ம் தேதி தணிக்கை வாரியத்துக்கு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தை டிச.19ம் தேதி தணிக்கை வாரியம் ஏற்றுக்கொண்டது.

தொடர்ந்து டிச.22ம் தேதி படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு, சில காட்சிகளை மாற்றம் செய்தால் U/A 16+ சான்றிதழ் வழங்கப்படும் என தயாரிப்பு நிறுவனத்துக்கு பரிந்துரை செய்தது. பரிந்துரையை ஏற்று படத்தில் சில காட்சிகளை நீக்கியும், மாறுதல்களை செய்தும் மீண்டும் டிச.24 அன்று தணிக்கை குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பியது.

இதையடுத்து, ஜனநாயகன் படத்துக்கு U/A 16+ சான்றிதழ் வழங்க முடிவு செய்திருப்பதாக தணிக்கை குழு சார்பில் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு டிச.29ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தணிக்கை சான்றிதழ் பெற தணிக்கை இணையதளத்தில் கதையை பதிவேற்றம் செய்ய முயன்றும் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. அதனால், டிச.31 மற்றும் ஜன.1ம் தேதி ஈ-மெயில் மூலமாக தயாரிப்பு நிறுவனம் தணிக்கை வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் "மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு படை சின்னம்" குறித்த காட்சிகள் இருப்பதால் படத்தை மீண்டும் பார்வையிட மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செந்திருப்பதாக தணிக்கை வாரிய தலைவர் படக்குழுவுக்கு ஜன.5ம் தேதி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, ஏற்கனவே படத்தில் சில காட்சிகளை நீக்கியதால் UA 16+ சான்றிதழ் வழங்க முடிவு செய்த பின்பு, மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்ப வேண்டும் என்ற தணிக்கை தலைவர் முடிவை எதிர்த்து படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், படத்தை பார்வையிட்ட ஆய்வு குழு உறுப்பினர்களில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரை செய்தார். தன்னிச்சையாக முடிவு செய்ய தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஏற்கனவே போதுமான மாறுதல்களுக்கு பின் UA 16+ சான்றிதழ் வழங்க முடிவு செய்த நிலையில், மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தணிக்கை வாரியம் பதிலளிக்க போதுமான அவகாசம் தராமல் தீர்ப்பு வழங்கியது தவறு என தெரிவித்து தனி நீதிபதி உத்தரவுக்கு (ஜன.9) இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, படக்குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.