×

#BREAKING : PSLV C-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் தகவல்..!

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, 2026-ஆம் ஆண்டின் முதல் விண்வெளித் திட்டமாக பி.எஸ்.எல்.வி-சி62 (PSLV-C62) ராக்கெட் இன்று காலை 10:18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. புவியைக் கண்காணிக்கும் இ.ஓ.எஸ்-என்1 (EOS-N1) உட்பட மொத்தம் 18 செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்ற இந்த ராக்கெட், ஆண்டின் முதல் திட்டம் என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இருப்பினும், ராக்கெட் ஏவப்பட்ட சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்தது. இதுகுறித்து விளக்கமளித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், ராக்கெட் திட்டமிட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால், இலக்கை அடையவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது இதற்கான தரவுகள் (Data) தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பி.எஸ்.எல்.வி ஏவுகலத்தின் நான்கு நிலைகளில், முதல் மூன்று நிலைகள் வரை பயணம் சீராக இருந்ததாகத் தலைவர் நாராயணன் குறிப்பிட்டார். குறிப்பாக, திட மற்றும் திரவ எரிபொருள்களைக் கொண்ட நிலைகளைக் கடந்து, மூன்றாம் நிலையின் இறுதிக்கட்டத்தில் நுழையும் போதுதான் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே ராக்கெட் தனது பாதையை மாற்றிக்கொண்டது. இந்தத் தோல்விக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உயர்மட்டக் குழு விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.