#BREAKING : மன்னிப்பு கோரினார் நாம் தமிழர் சீமான்!
நாம் தமிழர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2023-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி மீண்டும் விசாரித்தது. சீமான் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே கடிதம் வழங்கி இருந்த நிலையில், நடிகை சார்பில் வக்கீல் ஆஜராகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு இடமில்லை என்று கூறினார்.உச்ச நீதிமன்றம் இரு தரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வர அறிவுறுத்தியது. அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், நடிகை விஜயலட்சுமி தரப்பில், "சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதிதான் வேண்டும்" என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது.
இதையடுத்து சீமான் தரப்பில், மன்னிப்பு கோரி ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னிப்புக் கோரி சீமான் இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தார். இதற்கு சீமான் தரப்பில், "மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளோம்" என்று வாதிடப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த விஜயலட்சுமி தரப்பு, "அந்த அறிக்கையில் நீதிமன்றம் கூறியது போல மன்னிப்பு இல்லை. எனவே அதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, "இருவரும் அரசியல்வாதிகளா?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜயலட்சுமி தரப்பு, "நான் தான் நடிகை, எதிர்தரப்புதான் அரசியல்வாதி" என்று விளக்கம் கொடுத்தது. மேலும், "மன்னிப்பு கேட்க ஒத்துக்கொண்டு அதை மனப்பூர்வமாக செய்யவில்லை. அவரது அறிக்கையை படித்து பார்த்தாலே அவரது வன்மம் தெரியும். தற்போதும் வெளியில் தன்னை பற்றி தவறாக தான் பேசிவருகிறார்" என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதி நாகரத்னா, "இரு தரப்பும் இதை பேசி முடிக்க வேண்டும். மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது இருக்கும். இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியுள்ளது. சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.