#BREAKING : 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மொபைல் போன் தடை..கர்நாடக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!
இன்றைய தினம் கர்நாடக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. கர்நாடக முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்யும் 17வது பட்ஜெட் இதுவாகும்.இதுவரை சித்தராமையா 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். இன்று 17வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.
கர்நாடக அரசு கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ₹47,224 கோடி ஒதுக்கியுள்ளது.. இதைத் தொடர்ந்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறைக்கு ₹34,929 கோடியும், எரிசக்தித் துறைக்கு ₹29,947 கோடியும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (RDPR) துறைக்கு ₹26,559 கோடியும் என குறிப்பிடத்தக்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுப்பணித் துறைக்கு ₹11,424 கோடி, வேளாண்மைக்கு ₹8,373 கோடி, உணவுத் துறைக்கு ₹7,942 கோடி, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறைக்கு ₹4,084 கோடி என நிதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி பிற துறைகளுக்கு ஒட்டுமொத்தமாக ₹1,72,757 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் ஓட்டும் திறனை மேம்படுத்தவும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும், மைசூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சைக்கிள் வெலோட்ரோம் ஒன்று கட்டப்படும்
உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் களைய, ரோஹித் வெமுலா சட்டம் (பட்டியல் சாதிகள்/பழங்குடியினர் மீதான பாகுபாட்டில் இருந்து பாதுகாப்புச் சட்டம்) அமல்படுத்தப்படவுள்ளது. அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனங்களிலும் இது அமல்படுத்தப்படும்.
18 வயதுக்குட்பட்ட டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச இன்சுலின் பேனாக்கள் வழங்கப்படும்.
கர்நாடகாவில் குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு.. குழந்தைகள் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மொபைல் போன் தடை விதிக்க கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.