×

#BREAKING : திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக..!
 

 

திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய முக்கிய கட்சியாக பார்க்கப்படும் மதிமுகவும் தவெகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது .இந்த நிலையில் மதிமுக வின் இரு எம்எல்ஏக்களில் ஒருவரான சீர்காழி தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் செல்வன் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவர் நேற்று நடந்த கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்திற்கு வரவில்லை மேலும் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றார்.

தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட சில நிர்வாகிகள் கூறுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே திமுக மற்றும் மதிமுக இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக தெரிவித்தனர். சட்டமன்றத் தேர்தலின்போது அந்த அதிருப்தி மேலும் அதிகரித்ததாகவும் அவர்கள் கூறினர்.

தேர்தலில் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதோடு, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை கட்சியின் பல நிர்வாகிகள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாததும் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், முதலமைச்சர் விஜய், வைகோவை நேரில் சந்தித்து பேசியதும், துரை வைகோவுடனும் மரியாதை நிமித்தமாக தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிப்படி கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டதை சில மதிமுக நிர்வாகிகள் வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் புதிய அரசியல் முடிவுகளை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை அண்ணாநகரில் நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழல் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக அறிவித்துள்ளது.

காங்கிரஸ்-ஐ தொடர்ந்து மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.