×

#BREAKING : தமிழக காவல்துறை தலைவராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பு ஏற்பு..!

 

தமிழக டி.ஜி.பி.,யாக பணிபுரிந்த சங்கர் ஜிவால், கடந்தாண்டு ஆகஸ்டில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, செப்டம்பர் மாதமே புதிய டி.ஜி.பி.,யை நியமித்து இருக்க வேண்டும். ஆனால், அப்போதைய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, புதிய டி.ஜி.பி.,யை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தியது. பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் சட்டசபை தேர்தலின்போது, வெங்கடராமன் மாற்றப்பட்டு, டி.ஜி.பி.,யாக சந்தீப்ராய் ரத்தோட், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் டில்லியில், யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் புதிய டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.


இந்நிலையில் இன்று (ஜூன் 03) தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றுக் கொண்டார். மகேஷ்குமார் அகர்வால், 54, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டு, 22 வயதில், தமிழக கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 2021ல், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். 10 ஆண்டுகள், சி.பி.ஐ., அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.


தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற பிறகு மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது: தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. காவல்துறைக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னை டிஜிபியாக நியமித்த முதல்வர் விஜய்க்கு நன்றி. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்க போகிறோம். இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.