×

#BREAKING : விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு..! ஜாமீன் கிடைக்குமா..? 

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி இரவு நடைபெற்றது. அதில் உரையாற்றிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார்.

சட்டமன்றத்தில் முதல்வரின் எலும்பு உடைக்கப்படும் என மார்க்கண்டேயன் பேசிய நிலையில், இதுதொடர்பான புகாரின் பேரில் மார்கண்டேயனை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.

தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியதால் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர் காசிராஜன் மார்க்கண்டேயனை விடுவிக்க கோரி தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் சார்பில் இந்த வழக்கில் மார்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து போலீசார் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி வாதாடும் போது, "கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் தூண்டுதலின் பேரில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இரண்டு நாள் போலீஸ் காவல் வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

காவலில் எடுக்க வேண்டும் எந்ற போலீசாரின் கோரிக்கையை மறுத்த நீதிபதி, மார்கண்டேயனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக,தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனு.தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு தாக்கல்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். பிற்பகலில் நடைபெறவுள்ள இந்த விசாரணையின் போது ஜாமின் கிடைக்குமா அல்லது வழக்கு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.