#BREAKING : 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்..!
1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்தத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, நிரந்தரமான காப்புரிமையைத் தாங்கள் பெற்றுள்ளதாகச் சரிகம தெரிவித்தது.
இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் என கூறி அமேசான் மியூசிக், ஐ-டியூன்ஸ், ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என வாதிட்டது. 1957 காப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்தத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதைச் சரிகம தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு முள்ளும் மலரும் ராஜா பார்வை 16 வயதினிலே நெற்றிக்கண் உள்ளிட்ட 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரபல இசைஞானி இளையராஜாவுக்கு அவரது இசைப் படைப்புகள் தொடர்பான பதிப்புரிமை (Copyright) வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. 'அன்னக்கிளி', '16 வயதினிலே', 'முள்ளும் மலரும்', 'ராஜ பார்வை' மற்றும் 'நெற்றிக்கண்' உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் (License) வழங்கவோ தற்போதைய நிலையில் இளையராஜாவுக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சரிகம (Saregama) இசை நிறுவனத்திற்கும் இளையராஜாவுக்கும் இடையே நிலவி வரும் இந்த பதிப்புரிமைப் பிரச்சனையில், சரிகம நிறுவனத்திற்குச் சாதகமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை (Interim injunction) நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் மூலம், இந்த 134 படங்களின் இசை உரிம விவகாரத்தில் இளையராஜாவுக்குத் தற்போதைக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.