#BREAKING : கோர விபத்து: நின்றிருந்த பள்ளி பேருந்து மீது லாரி மோதி 4 குழந்தைகள் பலி; 32 பேர் காயம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள லக்னோ - ஆக்ரா விரைவுச் சாலையில், சாலையோரம் நின்றிருந்த பள்ளிப் பேருந்து மீது வேகமாக வந்த லாரி மோதிய கோர விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், 24 மாணவர்கள் உட்பட 32 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த 'ஓரியண்டல் பப்ளிக் பள்ளி' மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 50 பேர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுப் பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை காலை சுமார் 6 மணியளவில் கன்னோஜ் மாவட்டத்தின் தாத்தியா (Thathia) பகுதி அருகே சென்றபோது, குழந்தைகள் கழிவறைக்கு செல்வதற்காக விரைவு சாலையின் ஓரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, நின்றிருந்த பள்ளி பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் பின்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 24 மாணவர்கள் மற்றும் 8 பள்ளி பணியாளர்கள் என மொத்தம் 32 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் கூறுகையில், "விபத்து நடந்தவுடன் காவல்துறையினர், உத்தரப் பிரதேச விரைவுச் சாலைகள் தொழில் மேம்பாட்டு ஆணைய (UPEIDA) ஊழியர்கள் மற்றும் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, சேதமடைந்த பேருந்தில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்டனர். பின்னர் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 4 குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்" என்றார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.