×

#BREAKING : HCL நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி..!!

 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்கள், சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு (CNG) கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த எரிபொருள் தட்டுப்பாடு போக்குவரத்துத் துறையை முடக்கியுள்ளது. சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் கூட எரிபொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறையினால் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்த எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க சில நாடுகள் மீண்டும் 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறையைக் கையில் எடுத்துள்ளன:

தாய்லாந்து: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அந்நாட்டு அரசு தனது ஊழியர்களையும், தனியார் துறை ஊழியர்களையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வியட்நாம்: மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதியை வழங்குமாறு அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனமான HCL நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஊழியர்களுக்கு இமெயில் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக HCL நிறுவனத்தின் அலுவலர்களிடம் விசாரித்த போது, வீட்டில் இருந்து வேலை செய்ய இமெயில் மூலம் தகவல் வந்ததாகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கிருக்கும் கேன்டீன்களில் உணவு சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.