#BREAKING : சிறையில் இருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்..!
சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமான 1984-ஆம் ஆண்டு சீக்கிய கலவரத்தில் ஈடுபட்டதற்காகக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன்குமார் (80), டெல்லி மருத்துவமனையில் இன்று காலமானார். திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அவர், அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதற்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் தனக்கு எதிரான தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வழக்கின் பின்னணி: பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, சரஸ்வதி விஹார் பகுதியில், நவம்பர் 1, 1984 அன்று ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களின் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஜஸ்வந்த் சிங்கின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், பஞ்சாபி பாக் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. பின்னர், சிறப்பு புலனாய்வுக் குழு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சஜ்ஜன் குமாருக்கு எதிராக முகாந்திரம் இருப்பதாக டிசம்பர் 16, 2021 அன்று நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.