×

#BREAKING | SIR படிவத்தை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு 

 

தமிழ்நாட்டில் SIR படிவத்தை சமர்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்றுடன் SIR படிவங்கள் சமர்பிப்பு நிறைவடைய இருந்த நிலையில், மேலும் 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக் கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை பிஎல்ஓ-க்கள் அல்லது வாக்காளா் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம். SIR படிவங்கள் பெறப்பட்ட பிறகு வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளா்களின் பெயா்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். டிசம்பர் 14-க்குள் கணக்கீட்டுப் படிவத்தை சமா்ப்பிக்காதபட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டுப் படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.

வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைகோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரைப் புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, உரிமைகோரல் மற்றும் ஆட்சேபணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.