×

#BREAKING : TET தேர்வில் இருந்து விலக்கு.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

 

"தமிழ்நாட்டில், ஓய்வு பெறும் வயதில் உள்ள ஆசிரியர்களை தகுதித்தேர்வு எழுத வற்புறுத்துவது வாழ்வாதாரத்தை பாதிக்கும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஆக.25) பேசிய அவர், "23.8.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகள் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களது பணி அனுபவத்தை கருத்தில் கொண்டு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை வலியுறுத்துகிறது" என்றார்

சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 25) பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்த தனித் தீர்மானம்:

ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவை போதிக்கும் தொழில் மட்டுமல்ல, அது மனித வளத்தை உருவாக்கி சமூகத்தின் எதிர்காலத்தை செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும் பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாக கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூக பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் (NCTE) 23.8.2010-ஆம் நாளில் தேதியிட்ட அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வு (டெஸ்ட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித இடையூறும் இன்றி தங்களுடைய பணியை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் ஆசிரியர் தகுதி தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 1.9.2025-ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு சிவில் அப்பீல் எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025-ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட உத்தரவினால் தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வினை பெற இயலும். மேலும் தேர்ச்சி பெறவில்லை எனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.5.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பில் பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.8.2028க்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுத வலியுறுத்துவது, வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் செயலாகும்.

எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் இம்மாமன்றத்தில் பின்வரும் தீர்மானம் முன்மொழியப்படுகின்றது:

தமிழ்நாடு பள்ளிகளில் 23.8.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்டகால பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு ‘டெட்’ட்டில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இதற்கேற்ப இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு 23.8.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் தேவையான சட்டபூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (NCTE) வழியாக இது தொடர்பான தெளிவான மற்றும் உரிமிக்க அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்மாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலமாகப் பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணி பலன்கள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.