#BREAKING : இபிஎஸ் ஷாக்..! தவெக-வில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் செம்மலை?
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாராபுரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வந்த சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் எனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தற்போது அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அக்கட்சியில் பயணிக்க எனது மனம் இடம் தரவில்லை. ஆகையால் தான் தற்போது அதிமுக கட்சியில் இருந்து விலகும் மிக கடினமான முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மலை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆக வெற்றி பெற்றார் செம்மலை. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் தற்காலிக சபாநாயகர் ஆகும் இவர் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
கொங்கு மண்டலத்தில் நீண்டகால அனுபவமும் வலுவான செல்வாக்கும் கொண்ட முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலையின் இந்த விலகலும் கட்சி மாற்றமும், அப்பகுதியில் அதிமுகவுக்கு மற்றொரு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தவெக தனது அரசியல் காய்நகர்த்தல்களைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில், செம்மலை போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களின் வருகை அக்கட்சிக்குக் கொங்குப் பகுதியில் புதிய எழுச்சியையும் பலத்தையும் தரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.