☰
×

#BREAKING : ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்... அமைச்சரவையில் அதிரடி மாற்றமா?

 

சென்னை கிண்டி லோக் பவனில் இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் அர்லேகரை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்.தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்ட நிலையில், நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.


தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (R.V. Arlekar) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து, இன்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி.அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக்கு அமைந்த அரசாங்கத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த 6 மாதங்களாகத் தமிழ்நாட்டிற்கு முழுநேர ஆளுநர் இல்லாத நிலை நீடித்து வந்த சூழலில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆர்.வி.அர்லேகரைத் தமிழ்நாட்டின் நிரந்தர முழுநேர ஆளுநராக நியமித்து உத்தரவிட்டார்.

முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (அக்டோபர் 14) இரவு சென்னை வந்தடைந்த ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு, விமான நிலையத்தில் அமைச்சர் ஸ்ரீநாத், தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற எளிமையான விழாவில் அவர் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக, ஆர்.வி.அர்லேகர் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்திருந்த முதலமைச்சர் விஜய், "தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்" எனத் தனது அதிகாரப்பூர்வ பதிவில் குறிப்பிட்டிருந்தார்.  


இன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள முதலமைச்சர் - ஆளுநர் சந்திப்பின் போது, அமைச்சரவை மாற்றம் மற்றும் மாநில நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.