#BREAKING : பிக்பாஸ் வர்ஷினி வெங்கட் அதிரடி கைது!
குறும்படம் தயாரிப்பதாகக் கூறி நபர் ஒருவரிடம் ரூ. 5 லட்சம் வரை மோசடி செய்ததாக, பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற நடிகை வர்ஷினி வெங்கட் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.
காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
பாதிக்கப்பட்ட நபர், குறும்படம் தயாரிப்பதாகக் கூறி வர்ஷினி அளித்த வாக்குறுதியை நம்பி ரூ. 5 லட்சத்தை அவரிடம் வழங்கியுள்ளார். ஆனால், குறிப்பிட்டபடி படம் தயாரிக்கப்படாததால், அவர் தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.
பணத்தைத் திரும்பக் கேட்டபோது, வர்ஷினி அவருக்கு மிரட்டல் விடுத்ததுடன், கிண்டி பகுதியில் வைத்து அவரிடமிருந்த ரூ. 50,000 ரொக்கப் பணம் மற்றும் இரண்டு கைபேசிகளையும் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மோசடி மற்றும் வழிப்பறி ஆகிய பிரிவுகளின் கீழ் வர்ஷினி மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவைத் தொடர்ந்து, நடிகை வர்ஷினி வெங்கட்டை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் இவர்..??
சன் டிவியில் 'கண்ணான கண்ணே' உள்ளிட்ட தொடர்களில் நடித்து கவனம் பெற்றவர். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்ட்கார்டு போட்டியாளராக நுழைந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த சில நாட்களிலேயே தன்னுடைய கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்தி கவனம் பெற்றாலும், நாமினேஷனில் சிக்கி மூன்று வாரங்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சந்தானம் நடித்த டிடி நெக்ட் லெவல் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
சென்னை கிண்டியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த புகாரில் குறும்படம் எடுக்க வேண்டும் முதலீடு செய்யுங்கள் என வர்ஷினி வெங்கட் தன்னை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பெற்றதாகவும், மேலும் ரூ.27 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கிண்டி போலீசார் வர்ஷினி வெங்கட் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.