×

பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்..!!

 

டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அடுத்தாக மத்திய உள்துறை அமைச்சரையும், பாஜக மூத்த தலைவரையும் சந்தித்து தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்ன.? என பட்டியலை வழங்கியிருந்தார்.

எனவே அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.ராமலிங்கம், அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்தால் கட்சி இன்னும் மோசமாக தோல்வி அடைந்திருக்கும் என தெரிவித்திருந்தார். இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில், கட்சியில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டதாக செய்தி பரப்பபட்டது. பாஜக மாநில தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் கையெழுத்துடன் அந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக வெளியிட்ட அறிக்கையில்,மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும் அவ்வாறு வெளிவந்த அறிக்கை விஷமிகளால் போலியாக தயாரிக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.. இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் வெளியிட்டுள்ள பதிவில், என்னைப்பற்றி தவறாக பதிவிட்ட பதர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பாஜக சட்டப் பிரிவு தலைவர் குமரகுரு அவர்கள் தேசிய தலைமையின் அறிவுறுத்தல் படி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் , வார்ரூம் சில்லுவண்டுகளுக்கு இது முதல் கட்ட எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.

அடுத்தாக வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், 4.6.2026 தேதியிட்ட நயினார் நாகேந்திரன் அறிவிப்பு என்று அண்ணாமலையின் அடிவரடிகள் வெளியிட்ட Fake அறிவிப்பிற்க்கு பாரதிய ஜனதா கட்சி மாநில சட்டபிரிவு தலைவர் கொடுத்துள்ள புகார் மனு , பிராடு அண்ணாமலை இரசிகர்கள் அடங்க வேண்டும் , இல்லையென்றால் அடக்க படுவார்கள் என கே.பி.ராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்