×

அங்கன்வாடிக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு! ஈரோட்டில் சோகம்

 

ஈரோடு சூரம்பட்டி அருகே குழந்தைகள் நல மையத்தில் இருந்து காணாமல் போன 6 வயது சிறுவன் சஞ்சய் உடல் பெரும்பள்ளம் ஓடையில் சடலமாக மீட்கப்பட்டது. 


ஈரோடு சூரம்பட்டி பகுதியில் குழந்தைகள் மையத்திற்கு வந்து மாயமான ஆறு வயது சிறுவன் அருகில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில் சடலமாக மீட்கப்பட்டான். சூரம்பட்டி அருகே ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்த சக்ரவர்த்தி-சந்திரகுமாரி தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  மூவரும் தனியார் பள்ளியில் பயின்று வரும் நிலையில், சந்திரகுமாரி வெளியூர் செல்வதால் குழந்தைகள் மூவரையும் அருகில் சாந்தாகருக்கு குழந்தைகள் மையத்தில் விட்டுச்சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகள் மூவரும் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்த நிலையில் சிறுவன் சஞ்சய் மாயமானான்.  அருகில் பெரும்பள்ளம் ஓடை செல்வதால் அதில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பதறிபோன குழந்தைகள் மைய ஊழியர், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 
 
சம்பவ இடத்திற்கு வந்த சூரம்பட்டி மற்றும் அரசு மருத்துவமனை போலீசார் மாயமான குழந்தை குறித்து விசாரணை நடத்தினர். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பெரும்பள்ளம் ஓடையில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஸ்டோனி பாலம் என்ற இடத்தில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். குழந்தைகள் மையத்திற்கு சென்ற சிறுவன் திடீரென மாயமாகி அருகில் உள்ள ஓடையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.