×

தீம் பார்க்கில் மயங்கி விழுந்து சிறுவன் பலி

 

ராசிபுரம் அருகே பரவச உலகம் என்ற தீம் பார்கில் மயங்கி விழுந்த சிறுவன் முதலுதவிக்கு பின் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளாது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பரவச உலகம் என்ற தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. அங்கு சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருடைய மகன் 6-ம் வகுப்பு படிக்கும் சர்வேஸ்வரன் (11) குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் பரவச உலகம்  தீம் பார்கில் குளித்துவிட்டு கீழே வந்த நிலையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.


இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு வலிப்பு பிரச்சனை உள்ளதாகவும், எனவே உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் எனவும் கூறி இருசக்கர வாகனத்தில் வைத்து அருகில் உள்ள ஜெயம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை செய்துள்ளனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவனை சோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.


இது சம்பந்தமாக வெண்ணந்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தொடர்பாக பல்வேறு செய்தி ஊடகங்கள் பரவச உலகம் தீம் பார்க் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும், உயிர் இல்லாத நிலையில் தூக்கிச் சென்றதாகவும் செய்தி வெளியிட்டுள்ளனர். 


சம்பவம் குறித்து காவல் துறையிடும் விசாரித்த போது தண்ணீரில் குளித்து மேலே வந்த பிறகு மயக்கம் அடைந்ததாகவும், அங்கேயே முதலுதவி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்வரை மாணவன் உயிருடன் தான் இருந்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.  எனவே தண்ணீரில் மூழ்கி இறந்தாக கூறுவது தவறான தகவல் எனவும்,பிரேத பரிசோதனைக்கு பின்னரே தண்ணீரில் குளோரின் அளவு அதிகமாக இருந்து பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து முழு தகவல் தெரியும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.