16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் - போக்சோவில் வழக்குப்பதிவு..!!
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 16 வயது மகள், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில், செல்போனில் அதிக நேரம் செலவழித்த அந்த சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, ஓடும் மின்சார ரெயிலில் வைத்து அந்த சிறுவன், சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் யாருக்கும் தெரியாத நிலையில், இருவரும் அவரவர் வீடுகளிலேயே வசித்து வந்துள்ளனர்.
சமீபகாலமாக சிறுமிக்குத் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த தாய், அவரை சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், கும்மிடிப்பூண்டி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் நிலைக்குக் காரணமான சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் இருவருமே மைனர்கள் என்பதால், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.