×

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி

 

திருப்போரூர் அருகே ஆலத்தூர் சிட்கோ தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் பாய்லர் வெடித்து உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வேம்படி வினாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (50). இவர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றிருந்தார். பகல் 1 மணியளவில் அவரது வீட்டிற்கு போன் செய்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நாகராஜன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனலட்சுமி மற்றும் உறவினர்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன கசிவு காரணமாகத்தான் அவர் மூச்சுத்திணறி இறந்தார் என்றும் அதனால் தங்களது குடும்பத்திற்கு நஷ்டஈடு தர வேண்டும் என்றும் கோரி இருந்தனர். 

இந்நிலையில் இன்று காலை செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்த அவரது உடலை பெற மறுத்த அவர்கள் வேன்கள், கார்கள் மூலம் ஆலத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை வளாகம் முன்பு திரண்டு நிர்வாகத்திற்கு எதிராக திரண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், 4 மணி நேரமாக எந்த முடிவையும் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்காததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதன் பின்னர் 10 பேர் மட்டும் உள்ளே அழைத்து செல்லப்பட்டு தொழிற்சாலை வளாகத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் இறந்தவரின் மகனுக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடுகிறோம் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை கைவிட்டு கலைந்து சென்றனர்...