×

அதிகாலையில் பயங்கர விபத்து  : மேம்பாலத்தில் இருந்து தலைகீழாக விழுந்த பி.எம்.டபிள்யூ கார்!

 

மும்பையின் கடலோரச் சாலையில் (Coastal Road) அதிவேகமாகச் சென்ற பி.எம்.டபிள்யூ கார், கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, கீழே கட்டுமானப் பணியில் இருந்த வாகன நிறுத்துமிடத்தில் (Parking area) பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 5.20 மணியளவில், மெரைன் டிரைவ் (Marine Drive) பகுதியிலிருந்து ஹாஜி அலி (Haji Ali) நோக்கி அந்த பி.எம்.டபிள்யூ கார் சென்றுகொண்டிருந்தது. லாலா லஜபதிராய் கல்லூரிக்கு எதிரே உள்ள லோட்டஸ் ஜெட்டி பகுதியில் கார் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்று வீதியின் ஓரத்திலிருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் மேம்பாலத்தின் விளிம்பை உடைத்துக்கொண்டு, கீழே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வாகன நிறுத்தும் பகுதியில் கார் தலைகீழாகப் பாய்ந்தது. இந்த கொடூர விபத்தில் காரின் மேற்கூரை நொறுங்கி, முன் பகுதி மற்றும் கண்ணாடிகள் முற்றிலும் உருக்குலைந்தன. மேலும், மேம்பாலத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த பெயர்ப் பலகையையும் கார் கிழித்துக் கொண்டு கீழே விழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து, உயிருக்குப் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.