×

பாஜக அலுவலகத்தில் மண்டல தலைவர் மீது பைப், பெல்ட்டால் கொடூர தாக்குதல்…!

 

மேற்கு டெல்லியின் முண்ட்கா தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) கஜேந்திர தாரல், தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகியை விடிய விடிய பிணையாகப் பிடித்து வைத்துக் கொடூரமாகத் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கன்ஜாவ்லா பகுதியின் பா.ஜ.க தலித் மண்டலத் தலைவராகப் பணியாற்றி வரும் சுனில் குமார் என்பவர் இச்சம்பவம் குறித்து இணையதளத்தில் புகார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த வியாழக்கிழமை மாலை வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறி, எம்.எல்.ஏ கஜேந்திர தாரல் தம்மை பா.ஜ.க அலுவலகத்திற்கு அழைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

அலுவலகத்திற்குச் சென்றதும், அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களை அணைத்துவிட்டு, கதவுகளை உட்புறமாகப் பூட்டியுள்ளனர். பின்னர், விடிய விடிய தம்மைப் பிணைக்கைதியாகச் சிறைபிடித்து, பெல்ட், தடி மற்றும் பிளாஸ்டிக் குழாய்களால் கொடூரமாகத் தாக்கியதாகச் சுனில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சாதிய ரீதியாகவும், ஆபாச வார்த்தைகளாலும் தம்மை வசைபாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை தனக்கு நேர்ந்த இந்தத் தாக்குதலால் உடலெங்கும் ஏற்பட்ட கன்றிப்போன தழும்புகளையும் நீல நிறக் காயங்களையும் சுனில் சமூக வலைத்தளத்தில் காண்பித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்த போதிலும், காவல்துறை இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்துக் குரல் கொடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குல்தீப் குமார், பா.ஜ.கவை கடுமையாகச் சாடியுள்ளார். "பா.ஜ.க ஆட்சியில் அவர்களது சொந்தக் கட்சியின் தலித் பிரிவு மண்டலத் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. பா.ஜ.க அலுவலகத்திற்குள்ளேயே வைத்து ஒரு தலித் நிர்வாகி கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்ட சுனில் குமாருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, தலித் ஊழியரைத் தாக்கிய எம்.எல்.ஏ கஜேந்திர தாரலை உடனடியாக பா.ஜ.கவில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது எஸ்சி/எஸ்டி (SC/ST Act) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.