×

இபிஎஸ் உருவப்படம் எரித்த பாஜக நிர்வாகி - 6 மாத சஸ்பென்டை இரே இரவில் வாபஸ் பெற்ற பாஜக..

 


அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடி, 6 மாத காலம் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இடை நீக்கத்தை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.  

அண்மைக்காலமாக அதிமுகவுக்கும்,  பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இருகட்சியினரும் மாறி மாறி வார்த்தைப்போர் நடத்தியதோடு,  கட்சித் தலைவர்களின் உருவப்படங்கள், பொம்மைகளை எரித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அந்தவகையில் தூத்துகுடி வடக்குன் மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன்,  தினேஷ் ரோடியை 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்வதாக நேற்று அறிவித்திருந்தார்.  இந்நிலையில் இன்று அந்த சஸ்பென்ட் ரத்து செய்யப்படுவதாக  பாஜக மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் திரு வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து திரு தினேஷ் ரோடி அவர்களை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் திரு தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.