"இது சாதாரண வெற்றி அல்ல... மக்கள் கொடுத்த சம்மட்டி அடி"- வானதி சீனிவாசன்
தேர்தல் ஆணையத்தின் மீது வீண் பழி சுமத்தி நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல் ஆணையத்தின் மீது வீண் பழி சுமத்தி நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்தி, போராட்டம் என்ற பெயரில், நாட்டின் அமைதியை சீர்குலைத்து, குறுக்கு வழியில் அதிகாரத்ததை கைப்பற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட், குடும்ப, ஊழல் சக்திகளான மாநில கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாமில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் நந்திகிராம், ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதிகளில் 75 சதவீதம், அசாமின் மாகோன் மக்களவைத் தொகுதியில் 51 சதவீதம் வாக்குகளைப் பெற்று பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் 61.12 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள.
இது சாதாரண வெற்றி அல்ல. தேர்தல் ஆணையத்தின் மீது பழி சுமத்தி, நாட்டின் கலகத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடி. இனியாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று, தேர்தல் மூலம் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். மாறாக, தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டிருந்தால் எப்போதும் தோல்வி தான் கிடைக்கும். இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் நடத்துவது, வாக்குகளை எண்ணி முடிவை அறிப்பது என தேர்தல் பணிகளை, தலைமைத் தேர்தல் ஆணையரோ, தேர்தல் ஆணையமோ செய்வதில்லை. மாநில அரசு ஊழியர்கள்தான் அதை செய்கிறார்கள். மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவர் தான் உண்மையான தேர்தல் அதிகாரி. இந்த உண்மை தெரிந்தும், தெரியாதது போல நாட்டின் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்கள் எப்போதும் தேர்தலில் வெல்ல முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.