×

திமுகவிற்கு வாக்களிக்காதவர்களுக்கு “நல்ல சாவே வராது” என சாபம் விடுவதா?- வானதி சீனிவாசன் கண்டனம்

 

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை இழிவுபடுத்துவதுதான் திமுகவின் அரசியல் நாகரீகமா?

எதிர்க்கட்சியினர், திட்டங்களின் பயனாளிகள், பெண்கள் என தொடர்ந்து பல்வேறு தரப்பினரை இழிவுபடுத்திப் பேசிய திமுகவினர், இப்போது தங்களுக்கு வாக்களிக்காத மக்களையே சாபமிடும் நிலைக்குச் செல்வது என்ன மனநிலை என்று தெரியவில்லை.மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணங்களில் இதுபோன்ற அகங்காரப் பேச்சுகளும் ஒன்று என்பதை திமுக-வினர் மறக்கக் கூடாது. இனியாவது மேடைகள் உங்கள் வீடுகள் அல்ல என்பதை உணர்ந்து, மக்களின் வாக்குரிமையை மதித்து, அரசியல் நாகரீகத்துடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.