×

சமூக நீதி எங்கே? பெயரை மட்டும் மாற்றினால் போதுமா?- விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு மலக்கழிவுகள் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக பாஜக மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “பள்ளி மாணவர்கள் அருந்தும் குடிநீர் தொட்டியில் மலக்கழிவு? சமூக நீதி எங்கே..? பெயரை மட்டும் மாற்றினால் போதுமா 
முதல்வர் விஜய் அவர்களே..? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு மலக்கழிவுகள் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஏற்கனவே கடந்த  2022-ல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் அமைந்திருந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மக்கள் அருந்தும் குடிநீரில் மலக்கழிவுகள் கலந்த விவகாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தற்போது மீண்டும் இதேபோன்ற செய்திகள் வருவது ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

பள்ளி மாணவர்கள் அருந்தும் குடிநீர் தொட்டியில் மலக்கழிவு? சமூக நீதி எங்கே..? பெயரை மட்டும் மாற்றினால் போதுமா @CMOTamilnadu அவர்களே..?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு மலக்கழிவுகள்… pic.twitter.com/jHuFIGQZmx

— Vanathi Srinivasan (@VanathiBJP) August 3, 2026


சமத்துவம் நிலைநாட்டக் கூடிய பல நூறு மாணவர்கள் பயிலும் புனிதமான கல்விக் கூடத்தில் சமூக விரோதிகள் இதுபோன்ற  கொடுஞ்செயலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதும், மன்னிக்க முடியா குற்றமுமாகும். இந்தப் படுபாதகச் செயலைப் புரிந்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன். முதல்வர் விஜய் அவர்களே உங்கள் தலைமையிலான அரசு சமூக நீதித்துறை என்று துறையின் பெயரை மட்டும் மாற்றினால் மாற்றம் பிறக்காது. இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறாவண்ணம் கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே உண்மையான மாற்றத்தைக் கொடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.