☰
×

உச்சநீதிமன்றத்தை அவமானப்படுத்திய முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும்- வானதி சீனிவாசன் 

 

உச்ச நீதிமன்றத்தை அவமானப்படுத்திய முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவி விலக வேண்டும் என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த ஆண்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் அன்றைய திமுக அரசு அடக்குமுறைகளை ஏவியது. இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், தீபத் தூணில் தீபம் ஏற்றாமல், ஜோசப் விஜய் அரசு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. திமுக அரசு பின்பற்றிய அதே இந்து விரோதப் போக்கை, ஜோசப் விஜய் அரசும் செய்திருக்கிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்து கோயில்களுக்கு சென்று வழிபட்டது எல்லாம், இந்துக்களை ஏமாற்ற நடத்தப்பட்ட நாடகம் என்பது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தீபத் தூணில் தீபம் ஏற்றாததன் மூலம் உறுதியாகியுள்ளது. மாற்று மதத்தை சேர்ந்தவரான ஜோசப் விஜய், பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளார்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை, இந்து கடவுள்களை, இந்து சம்பிரதாயங்களை மட்டும் எதிர்க்கும் கட்சிகளின் வரிசையில் தவெகவும் சேர்ந்திருக்கிறது. இந்துக்களுக்கு ஆதரவானது என்றால், உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் கேட்க மாட்டோம் என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் செயலில் காட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுத்தாதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவே காரணம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல், இந்துக்களை மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தையும் அவமானப்படுத்திய முதல்வர் ஜோசப் விஜய் பதவி விலக வேண்டும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும். அதற்கான காலம் விரைவில் வரும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.