கூலிப்படைகளின் கூடாரமாகிறதா தமிழகம்..?- வானதி சீனிவாசன்
உங்கள் நண்பா நண்பிகளுக்கும், தம்பி தங்கச்சிகளுக்கும் கொடுக்க நினைத்த மாற்றம் இதுதானா தமிழக முதல்வர் அவர்களே? என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு அருகே பெட்ரோல் பங்க்-ல் இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூலிப்படைகளின் அட்டகாசம் குறைந்திருந்த நிலையில் தற்போது சர்வசாதாரணமாக கூலிப்படைகள் கொலைகளையும், கொடுங்குற்றங்களையும் அரங்கேற்றி வருவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படும் பாதாளத்திற்குச் சென்றுவிட்டதையே உணர்த்துகிறது. ஆனால் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வரோ சினிமா ஷுட்டிங் செல்வது போல் இலண்டன் சென்று அங்கும் ரீல்ஸ் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் தொடரும் கொலைகளால் இரத்த ஆறு ஓடுவதும், பெண்களுக்கு பாதுகாப்பின்மையும் நாளுக்கு நாள் மிகவும் அதிகமாகி வரும் வேளையில் முதல்வர் விஜய்யோ தனக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தமே இல்லாதது போலேவே செயல்படும் அவரது நடவடிக்கைகள் கடும் அதிருப்தியை அளிக்கிறது.
உங்கள் நண்பா நண்பிகளுக்கும், தம்பி தங்கச்சிகளுக்கும் கொடுக்க நினைத்த மாற்றம் இதுதானா தமிழக முதல்வர் அவர்களே? வெறும் வெற்று அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகாது. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் கடும் நடவடிக்கைகளை அமல்படுத்தி கூலிப்படைகளையும் ரவுடியிசத்தையும் ஒழித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.