90 நிமிடங்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை ஒட்டுமொத்தமாக ஒடுக்கிய இந்தியா- வானதி சீனிவாசன்
ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக பாக்கிஸ்தானின் முக்கிய விமானப்படைத் தளங்களை குறிவைத்து 90 நிமிடங்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தி பாக்கிஸ்தான் இராணுவத்தை ஒட்டுமொத்தமாக ஒடுக்கியுள்ளது நம் இந்தியா. இது தான் வெற்றி! என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது தான் வெற்றி! ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக பாக்கிஸ்தானின் முக்கிய விமானப்படைத் தளங்களை குறிவைத்து 90 நிமிடங்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தி பாக்கிஸ்தான் இராணுவத்தை ஒட்டுமொத்தமாக ஒடுக்கியுள்ளது நம் இந்தியா.
1. நூர் கான் / சக்லாலா தளம் (ராவல்பிண்டி)
பாக்கிஸ்தானின் வான் தளவாடங்கள் மற்றும் விஐபி-களின் போக்குவரத்து மையமான இத்தளத்தை தாக்கி இஸ்லாமாபாத்தின் தகவல் தொடர்புகளை சிதைத்துள்ளது நம் இந்திய இராணுவம்.
2. ரபிக்கி தளம் (ஷோர்கோட்)
பாக்கிஸ்தானின் மத்திய பஞ்சாப்பில் உள்ள முன்னணி தளமான இதில் தாக்குதல் நடத்தி, பாக்கிஸ்தானை கணிசமாக பலவீனமடையச் செய்துள்ளோம்.
3. முரித் தளம் (பாக்கிஸ்தான் பஞ்சாப்)
விமானப் பயிற்சி தளமும் ஏவுகணை சேமிப்புக் கிடங்குமான முரித்தை தாக்கி சீர்குலைத்துள்ளது இந்திய வான்படை.
4. சுக்கூர் தளம் (சிந்த்)
இத்தளத்தை தாக்கி பாகிஸ்தானின் தெற்கு வான்வழிப்பாதையை மொத்தமாக துண்டித்துள்ளது இந்தியா.
5. சியால்கோட் தளம் (பாக்கிஸ்தான் கிழக்கு பஞ்சாப்)
எல்லைக்கு அருகிலுள்ள முக்கியமான இத்தளத்தை தாக்கி, கிழக்கு பாக்கிஸ்தானை சவாலுக்கு உள்ளாக்கியது நம் இந்திய இராணுவம்.
6. பஸ்ரூர் தளம் (பாக்கிஸ்தான் பஞ்சாப்)
அவசரக்கால விமானப்படை தளமான பஸ்ரூரை தாக்கி, பாக்கிஸ்தான் இராணுவத்தின் நெகிழ்வுத்தன்மையை உருக்குலைத்தது இந்தியா.
7. சுனியன் (ரேடார் மையம்)
ரேடார் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்பைத் தாக்கி, இந்திய விமானங்கள் எளிதாக ஊடுருவ வழிவகுத்தது நம் இந்தியப் படை.
8. சர்கோதா தளம் (முஷாஃப் தளம்)
அணுசக்தி விநியோகத் தளமாக விளங்கிய உயர்மட்ட படைத்தளத்தை இந்தியா தாக்கி பாக்கிஸ்தானின் விமானப்படையை சிதைத்தது.
9. ஸ்கார்டு தளம் (கில்கிட் பால்டிஸ்தான்)
வடக்கு பாக்கிஸ்தானின் வான் நடவடிக்கைகளை சீர்குலைத்து, சீனா-பாக்கிஸ்தான் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பை பலவீனப்படுத்தியுள்ளது இந்தியா.
10. போலாரி தளம் (கராச்சி அருகில்)
கடற்படை மற்றும் விமானப்படை தளமாக விளங்கும் இதனைத் தாக்கி, கராச்சியை பலவீனப்படுத்தியது நம் விமானப்படை.
11. ஜகோபாத் தளம் (சிந்த்-பலோசிஸ்தான்)
ஒருகாலத்தில் அமெரிக்கப் படைகளால் கூட பயன்படுத்தப்பட்ட இத்தளத்தை தாக்கியதன் மூலம், மேற்கு பாக்கிஸ்தானின் வான் கண்காணிப்பைத் துண்டித்தது இந்தியா.
ஆக, ஒருங்கிணைந்த துல்லிய தாக்குதல்கள் மூலம் பாக்கிஸ்தானின் விமானப்படைத் தளங்களை தகர்த்தது மட்டுமன்றி, அதன் மொத்த கட்டமைப்பையே தகர்த்து, எதிர்காலத்தில் தாக்குதல் நடத்த இயலாத நிலைக்கு தள்ளி, சாதனைப் புரிந்துள்ளது இந்தியா. இதன்மூலம் இந்தியாவை சீண்டியதற்கான விளைவு பேரழிவாக தான் இருக்கும் எனும் செய்தியை பாக்கிஸ்தானிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.