×

சிறுநீரகக் கடத்தல்- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குக: வானதி சீனிவாசன்

 

சிறுநீரகக் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள சிறுநீரகக் கடத்தல் சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கி 50 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யும் கொடூரச் செயலில் தனியார் மருத்துவமனைகளும் இடைத்தரகர்களும் ஈடுபட்டுள்ளனர். இது ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட மிகக் கேவலமான உடல் உறுப்பு மோசடியாகும். திமுக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினருடன் தொடர்புடைய தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகள் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணமாக குறைந்தபட்சம் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் நடைபெறாமல் தடுக்க, உறுப்பு தானம் தொடர்பான நடைமுறைகளில் தமிழக அரசின் சுகாதாரத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.