“தீய சக்தி திமுக கோவையை கெடுப்பதற்காக கரூரிலிருந்து ஒரு ஆளை இறக்குமதி செய்துள்ளது” - வானதி சீனிவாசன்
கோவை கணபதி மாநகர் பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, கோவை வடக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரச்சாரத்தை துவங்கினார்.
கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கணபதி மாநகர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது தேர்தல் பரப்புரையை துவங்கினார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசியவர், “தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது என்பதில், எந்த மாற்றமும் இல்லை. வடக்கு சட்டமன்ற தொகுதி, இந்த தொகுதி உருவான காலத்தில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. அந்த வெற்றியை தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் தொடங்க போகிறது. தி.மு.க வை அழித்து ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு பலம் பொருந்திய கூட்டணி ஒரே கூட்டணி அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே, தீய சக்தி என்ற தி.மு.க கோவையை கெடுப்பதற்கு என்றே கரூரில் இருந்து ஒரு இறக்குமதியை அனுப்பி இருக்கிறார்கள். கொங்கு மண்டலம் எப்பொழுதும் விஷக் கிருமிகளை வளர விடுவதில்லை, கொங்கு மண்டலத்துக்கு என்று தனியாக வரலாறு இருக்கிறது. ஆக கடந்த முறை போலவே, இந்த முறையும் பத்துக்கு, பத்து என்று கொங்கு மண்டல தளபதி எஸ்.பி.வேலுமணியின் தலைமையில் மீண்டும் இந்த மக்கள் அடையாளம் காட்டுவார்கள், நிரூபித்து காட்டுவார்கள். பிரச்சாரம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளோம். இந்த தேர்தல் பிரச்சார துவக்க விழாவிற்கு வந்து இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி” என்றார்.