×

“சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் குழப்பம்”- வானதி சீனிவாசன்

 

பூத் லெவல் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி வழங்காததால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் குழப்பம் ஏற்படுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கோவை மாநகர பகுதியில் 11 நவீன அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை புலியகுளம் மாநகராட்சி பள்ளியில்  நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், “தேசிய அனல் மின் நிறுவனத்திடம் இருந்து சமூக பங்களிப்பு நிதி பெற்று 11 புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மக்களுக்கு தேவையான பணிகளை செய்யாமல் வெறும் பெயர்களை மாற்றினால் போதும் என திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசின் குறைகளை மறைக்கவே தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை எதிர்த்து வருகிறது. தமிழகத்தில் இந்த திட்டம் சரியாக அமல்படுத்தவில்லை. பூத் லெவல் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி வழங்காமல், இந்தப் பணிகளை மாநில அரசு மேற்கொள்ள வைப்பதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது” என்றார்.

எஸ்.ஐ.ஆர் பல்வேறு குழப்பமும், குளறுபடியும் இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு தொடர்ந்து ஆதரவாக பேசி வரும் பாஜக வின் சட்டமன்ற உறுப்பினரே தமிழகத்தில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு உரிய பயிற்சி வழங்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.