“1967ஆம் ஆண்டில் காங்கிரசை அனைத்து வகையிலும் தீர்த்துக்கட்டியது திமுக தான்”- தமிழிசை
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்தது பலம்தான். மாம்பழத்தை பலம் இல்லையென்று எவ்வாறு கூற முடியும்? தாமரை, இலை, மாம்பழம் என அனைத்தும் இயற்கையில் இருந்துதான் வருகிறது. என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “தேசிய ஜனநாயக கூட்டணியில் எல்லோரும் மகிழ்ச்சியோடு எங்களுடன் இணைந்து வருகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் யாருக்கும் எந்த நெருக்கடியும் இல்லை. காங்கிரஸ் கட்சியால்தான் திமுகவுக்கு நெருக்கடி. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் முக்கியமான நேரத்தில் காங்கிரஸ் தலைவர் விடுமுறை எடுப்பது போல் மாணிக்கம் தாகூர் விடுமுறை எடுத்து சென்றுள்ளார். பாஜகவினர் யாரும் விடுமுறையில் செல்லவில்லை. பாஜகவிற்கு எந்த நெருக்கடியும் இல்லை, அழுத்தமும் இல்லை. திமுகவிற்குதான் நெருக்கடி.
மக்கள் பிரதமர் மோடியின் வருகையை எதிர் பார்த்து வருகிறார்கள். தமிழகம் வளர்ச்சி பாதைக்கு செல்வதற்கான அடித்தளம் நாளைக்கு அமைக்கப்படும் எனவும் தமிழகம் போதை பொருட்களில் முழுகியுள்ளது, கடனில் தத்தளிக்கிறது. செல்வப்பெருந்தகை கூறுவது போல் திமுகவும், காங்கிரஸும் இயற்கை கூட்டணியா? 1967ஆம் ஆண்டில் காங்கிரசை அனைத்து வகையிலும் தீர்த்துக்கட்டியது தி.மு.க. தான்..! இது தான் இயற்கையான கூட்டணியா..? பாஜக இயற்கையான கூட்டணி. தாமரை, இலை, மாம்பழம் என அனைத்தும் இயற்கைதான். தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கையான கூட்டணி. வட்ட இலையில் மலர்ந்தாலும், இரட்டை இலையில் மலர்ந்தாலும் பாஜகவின் கூட்டணி இயற்கையான கூட்டணிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் செயல்படும் பாமக இணைந்துள்ளது. பாமகவின் உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் தலையிடமாட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்தது பலம்தான். பழமும்(மாம்பழம்) பலம்தான். மாம்பழத்தை பலம் இல்லையென்று எவ்வாறு கூற முடியும். தேமுதிகவை கூட்டணிக்கு அழைக்கவில்லையா என்பதை பிரேமலதா அக்காவிடம் கேளுங்கள். கூட்டணிக்கு யாரை அழைக்க வேண்டுமோ அவர்களை பியூஸ் கோயல் அழைத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைவரும் சேர்ந்தே உள்ளனர்” என்றார்.