×

“1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி”- தமிழிசை

 

தமிழக வாக்காளர் பட்டியலில் 1 கோடி போலிப் பெயர்கள் நீக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு  வாக்காளர் பட்டியலில் சுமார் 1 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, பாஜகவின் முன்னாள்  மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலில் 1 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உண்மையில் இவர்களை 'வாக்காளர்கள்' என்று சொல்லக்கூடாது; 'வாக்காளர்கள் எனக் குறிப்பிடப்பட்டவர்கள்' என்றுதான் சொல்ல வேண்டும். தகுதியற்றவர்கள், இறந்துபோனவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களே இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது முறையான ஒரு தூய்மைப்படுத்தும் பணி.தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்புத் திருத்த நடவடிக்கையை இந்தியா கூட்டணி கட்சிகள், குறிப்பாக முதல்வர் உள்ளிட்டோர் ஏன் எதிர்த்தார்கள்? 'தேர்தல் முடியட்டும், அதன் பிறகு திருத்தம் செய்யலாம்' என அவர்கள் கூறியதன் நோக்கம் என்ன? இந்த ஒரு கோடி போலிப் பெயர்களை வைத்துக்கொண்டு தேர்தலில் முறைகேடு செய்யத் திட்டமிட்டிருந்தார்களா? இன்று தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான நடவடிக்கையால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் அதிக அளவிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 

இதுவே இந்த திருத்த நடவடிக்கையின் அவசியத்தைப் கூறுகிறது.இனிமேல்தான் தமிழகத்தில் முறையான, உண்மையான தேர்தல் நடைபெறப் போகிறது.நாளை பாஜகவின் தேசிய செயல் தலைவர் தமிழகம் வருகிறார். அவர் தமிழக நிர்வாகிகளைச் சந்தித்த பிறகு புதுச்சேரி செல்கிறார். செயல் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் அவர் தென்பகுதிக்கு, குறிப்பாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருவது கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதற்கு இதுவே சாட்சி.தேர்தல் ஆணையத்தின் இந்த தூய்மைப்படுத்தும் பணியால், இறந்தவர்களின் ஆன்மாக்கள் இனி தேர்தல் நேரத்தில் அமைதியாக இருக்கும். திமுகவினர் தேர்தல் நேரத்தில் அவர்களைத் தொந்தரவு செய்ய முடியாது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரு வெளிப்படையான மற்றும் அவசியமான நடவடிக்கை, இதன் மூலம் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியும்” என்றார்.