×

“பாரதியார் இன்று இருந்திருந்தால் மோடிக்காக இதை நிச்சயம் செய்திருப்பார்”- தமிழிசை

 

பாரதியாரின் பிறந்த நாளை ஒட்டி வானவில் பண்பாட்டு மையம் சார்பில் "பாரதி திருவிழா 2025" நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் முகப்பில் இருந்து ஜதி பல்லக்கு ஊர்வலத்தை ஆளுநர் ஆர்என் ரவி கொடி அசைத்து துவக்கி வைத்து, அந்த ஜதி பல்லக்கை ஆளுநர் ரவி தனது தோளில் சுமந்து நடந்தார். அதை தொடர்ந்து பாரதியார் நினைவு இல்லத்தில் பாரதியாரின் திருவுருவ சிலைக்கு, ஆளுநர் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் அதே நேரத்தில் பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  வந்தே மாதரம் 150வது ஆண்டை பற்றிய பாராளுமன்ற விவாதத்தில் பாரதியாரையும், வ.உ.சி யை நினைவு கூர்ந்ததும் தமிழகத்தை சேர்ந்த நாம் எல்லோரும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள வேண்டும். திமுக எப்போதும் பிரிவினையை பேசுவது போல, இதுவரை எந்த பிரதமரும் பாரதியையும் , வ.உ.சியை மரியாதை செலுத்தியது இல்லை. பாரதியார் இன்று இருந்திருந்தால் பிரதமருக்கு ஒரு வாழ்த்து பாடல் பாடியிருப்பார். ஏனெனில் பிரதமர் தேசியத்தையும் தெய்வீகத்தையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

திமுக அறிவாலயத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு தேசிய கொடியை கூட ஏற்றியது கிடையாது. ஆனால் இன்று திருச்சி சிவா போன்றவர்கள் தேசப்பற்றை பேசிக் கொண்டிருக்கிறார்கள். தனி தமிழ்நாடு வேண்டும், சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள், தேசப்பற்றாளர் போல திருச்சி சிவா போன்றவர்கள் நாடகமாடுகிறார்கள்.‌ ஆனால் பாரத பிரதமர் காசியில் தமிழ் இருக்கை உருவாக்கியதாக இருக்கட்டும், மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழன் பெயர் சூட்டியதாக இருக்கட்டும், திருக்குறளை எல்லா மொழிகளிலும் மொழிப்பெயர்த்ததாக இருக்கட்டும், தமிழுக்கு பிரதமர் மிகப் பெரிய மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் நமது முதலமைச்சர், டெல்லி பாதுஷா என்று பேசிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு வரைக்கும் திமுக பாரதியாருக்கு விழா எடுக்கவில்லை. 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பாரதியாருக்கு மிக பிரம்மாண்டமான அரசு விழா பிரதமர் மோடியை வரவழைத்து நடைபெறும், அதற்காக வேண்டுகோள் வைப்போம்” என்று கூறினார்.