அமித்ஷா வருகை த.வெ.க. மாநாட்டை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்- தமிழிசை
அமித் ஷா வருகை த.வெ.க. மாநாட்டை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “சினிமாவில் வெற்றி பெற்ற விஜய் அரசியலில் இதுவரை வெற்றியை நிரூபிக்கவில்லை. உள்றை அமைச்சர் அமித்ஷா வருகை த.வெ.க. மாநாட்டை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அமித்ஷா வெற்றியை நிரூபித்து காண்பித்தவர். விஜய் இன்னும் அரசியல் வெற்றியை நிரூபித்து காட்டவில்லை. தவெக மாநாட்டில் விஜய் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை. ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம். கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய் தனது கொள்கையை கூறவில்லை.
தவெக மாநாட்டில் கொடி கம்பம் விழுந்ததைப் பார்த்து பயந்து விட்டேன். கொடி ஏற்றுவதற்கு மற்ற தலைவர்களைப் போல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு பெரிய கொடி கம்பம் சாய்ந்தும், யாரும் காயப்படவில்லை என்பதில் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். விஜய்யின் மாநாட்டுக்கு கூட்டம் கூடுவார்கள் ஆனால் ஓட்டு போடுவார்களா என்று தெரியாது. ஒவ்வொரு மாநாட்டிற்கும் அண்ணா, பெரியார் போன்ற ஒவ்வொருவரின் படங்களை யோசித்துப் பார்த்து, யோசித்துப் பார்த்து சேர்ப்பார். ராம்ப் வாக்கில் விஜய் செல்லும்போது தொண்டர்கள் வராமல் இருக்க கிரீஸ் தடவுகிறார்கள். தயவு செய்து அதை செய்யாதீர்கள்” என்றார்.