×

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகிகள்

 

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக இளைஞரணியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ( IT Wing) தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  இதேபோல் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப செயலாளர் திலீப் கண்ணன், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து பாஜக நிர்வாகிகள் பலர், அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருகின்றனர். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி, தனது டிவிட்டர் பக்கத்தில்,  “கூட்டணியில் இருந்தபடி அதிமுக இதை செய்திருக்கக்கூடாது, பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுகவில் அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் இனி பாஜகதான். அண்ணாமலை தலைமை கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்” என எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பாஜகவின் மாநில ஐடி விங் நிர்வாகி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது தொடர்ந்து பாஜக நிர்வாகியை அதிமுகவில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்  மணியாச்சி பேருந்து நிலையம் அருகே பாஜக ஐடி விங் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவ படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.