×

அன்பில் மகேஸ் துறையை மாற்ற வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

 

மது ஒழிப்பு என்கிற பொது பிரச்சனைக்காக மாநாடு நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாரதிய ஜனதாவை அழைக்க மாட்டேன் என்று கூறுவது அவரது பார்வையில் கோளாறு இருப்பதை காட்டுகிறது என பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அது குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் சேலம் வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “தமிழக பாரதிய ஜனதா கட்சியில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும்  மிக உற்சாகமாக உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் திமுகவானது கூட்டணி கட்சிகள் இன்றி தனியே நிற்கவில்லை. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலு நிறைந்ததாக எந்த கட்சியும் இல்லை. மது ஒழிப்பிற்காக யார் மாநாடு நடத்தினாலும் அது பாராட்டுக்குரியது. இதில் அரசியல் ஆதாயம் தேட யாரும் முயற்சிக்கக் கூடாது. பொதுவான பிரச்சனைக்காக மாநாடு நடத்த திட்டமிட்டு விட்டு பாரதிய ஜனதா கட்சியை மட்டும் அழைக்க மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுவது, அவரது பார்வையில் கோளாறு இருப்பதை காட்டுகிறது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை நல்ல வரவாக அமையட்டும். அரசியலில் பகையாளி என்று யாரும் இல்லை, தமிழக நலனுக்காகவும் தமிழர் நன்மைக்காகவும் அனைவரும் சேர்ந்து போராட வேண்டும். அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் அங்கு பல்வேறு நிறுவனங்களை அழைத்து பேசும் செய்தி , பெரிதாக மக்களைச் சென்றடையாத நிலையில் சென்னை அரசு பள்ளியில் நடந்த  நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாதவராக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். எனவே அவரது இலாகாவையாவது குறைந்தபட்சம் முதலமைச்சர் மாற்றம் செய்ய வேண்டும். பள்ளிப் பாடங்களில் அரசியல் தலைவரின் பாடங்களை வைப்பதில் ஆர்வம் காட்டும் திமுக அரசு, ஔவையாரின் நல்ல பாடல்களையும் நாலடியார் உள்ளிட்ட பாடங்களையும் நீக்கி உள்ளது” என்றார்.