×

காவல் நிலையத்தில் புகுந்து திமுக குண்டர்கள் தாக்குதல்; முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டும்- பாஜக 

 

திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த இரு வருடங்களாக சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வந்ததை தமிழக பாஜக தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சியில் காவல் நிலையத்தில் திமுகவின் இரு கோஷ்டிகளுக்கிடையே நடைபெற்ற கலவரத்தில் ஒரு பெண் தலைமை காவலர் ஒருவர் படுகாயமடைந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த இரு வருடங்களாக சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வந்ததை தமிழக பாஜக தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைத்து வந்த நிலையில், காவல் நிலையத்திலேயே புகுந்து திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது தமிழகம் வன்முறைக்காடாகி கொண்டிருக்கிறது என்பதை தெளிவு படுத்துகிறது. ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் காவல் நிலையத்திலும், பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட மோசமான நிலையை உருவாக்கியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்பதோடு, இந்த கோரமான தாக்குதல் நடைபெற்றதற்கு காரணமான திமுக முக்கிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.