☰
×

“கஜானாவைக் காலி செய்யும் கையாலாகாத்தனம்”- நயினார் நாகேந்திரன் விமர்சனம்

 

ஒரு யூனிட் மின்சாரத்தை ₹35 வரை கொட்டிக் கொடுத்து வாங்கி அரசு கஜானாவைக் காலி செய்யும் இத்தகைய கையாலாகாத்தனம் முதல்வர் திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் மட்டுமே அரங்கேறுகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “தேசிய சராசரியை மிஞ்சி நிற்கும் தமிழகத்தின் பணவீக்கம் (6.81%): சாமானிய மக்களின் தலையில் விலைவாசிச் சுமையை ஏற்றிய திரு. ஜோசப் விஜய் அரசு! தமிழகத்தின் பணவீக்கம் தேசிய சராசரியைத் தாண்டி 6.81% என்ற உச்சக்கட்ட நிலைக்கு எகிறியிருப்பது, திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசின் அப்பட்டமான நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாகும்! தொலைநோக்குப் பார்வையின்றி அத்தியாவசியப் பொருட்களின் உள்ளூர் சந்தை விலையைக்கூடக் கட்டுப்படுத்தத் தவறி, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் சீரழித்துச் சாமானிய மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார் திரு. விஜய் அவர்கள்.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், கடந்த மூன்று மாதங்களாக ஜி.எஸ்.டி (GST) வரி வசூல் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்மறை (Negative) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. புதிய தொழில் முதலீடுகள் எதுவும் வராமல் ஒட்டுமொத்தத் தொழிற்துறையும் முடங்கிக் கிடக்கிறது. மறுபுறம், மின்துறையில் வரலாறு காணாத நிர்வாகச் சீர்கேடு தலைவிரித்தாடுகிறது; ஒரு யூனிட் மின்சாரத்தை ₹35 வரை கொட்டிக் கொடுத்து வாங்கி அரசு கஜானாவைக் காலி செய்யும் இத்தகைய கையாலாகாத்தனம் முதல்வர் திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் மட்டுமே அரங்கேறுகிறது.

விமான நிலையத்திற்கான மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளைக்கூடத் தொலைநோக்கோடு செயல்படுத்தத் தெரியாமல் ஒட்டுமொத்த நிர்வாகமுமே செயலிழந்து கிடக்கிறது. இத்தகைய தொடர் நிர்வாகச் சீர்கேடுகளே இன்று தமிழகத்தில் பணவீக்கம் தேசிய சராசரியைத் தாண்டி எகிறியதற்கு முக்கியக் காரணங்களாகும். எனவே, தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் படுதோல்விக்கு இட்டுச் சென்றுள்ள திரு. ஜோசப் விஜய் அரசு, இனியாவது வெற்று விளம்பரங்களை விடுத்து, தமிழகப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் இந்த நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.