தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு விஜய் பாவ மன்னிப்பு கேட்கும் “Personal Event” தானே?- நயினார் நாகேந்திரன்
கரூரில் முதல்வர் திரு. விஜய் அவர்கள் பங்கேற்ற விழா, பள்ளிக்கூடங்களில் “நேரலை”யில் ஒளி பரப்பப்படுவதாக காணொளி வெளியானற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “ உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும் தானா? “கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல, அரசியலின் மேடை அல்ல” என்று நீங்கள் நீட்டி முழக்கி, இன்னும் ஒரு நாள் கூட முழுதாக முடிவடையவில்லை, அதற்குள் இன்று கரூரில் முதல்வர் திரு. விஜய் அவர்கள் பங்கேற்ற விழா, பள்ளிக்கூடங்களில் “நேரலை”யில் ஒளி பரப்பப்படுவதாக காணொளி வெளியாகியுள்ளது. சட்டமன்ற விவாதங்களை தடையின்றி நேரலையில் ஒளிபரப்ப முடியாத உங்கள் தவெக அரசு, தவெகவின் கட்சி நிகழ்வுகளை மெனக்கெட்டு அரசுப் பள்ளிகளில் நேரலை செய்வது அருவருப்பான அரசியல் வியூகம். பள்ளிக் கூடங்களையும், படிக்கும் மாணவர்களையும், கட்சி தூதுவர்கள் போல பாவிக்கும் தவெகவினரின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, பிள்ளைகளை பார்க்கச் செய்யுமளவிற்கு இன்றைய கரூர் நிகழ்வு என்ன அறிவார்ந்த அரசு நிகழ்ச்சியா? அல்லது அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் பங்கேற்ற அறிவியல் விவாத மேடையா? தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு, திரு. ஜோசப் விஜய் அவர்கள் பாவ மன்னிப்பு கேட்கும் “Personal Event” தானே? மற்ற கட்சிகளை குறை கூறி, தங்களை புனிதராக நிறுவ முற்படும் தவெகவின் கட்சி நிகழ்வை, அரசுப் பள்ளிகளில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? அந்தளவிற்கு விளம்பர மோகம் உங்களை வாட்டி வதைக்கிறதா? அல்லது எப்படியும் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில் மீண்டும் குழந்தைகளை குறிவைக்க முயற்சிக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.