“ஏழை எளியோரின் எமனாக அரசு மருத்துவமனைகள் உருமாறக் கூடாது”- நயினார் நாகேந்திரன்
கடலூர் அரசு மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சை பெற்ற பெண் ஒருவர், தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “கடலூர் அரசு மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சை பெற்ற பெண் ஒருவர், தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், இறந்த பெண்ணிடம் பல் மாற்று சிகிச்சைக்காக சட்டவிரோதமாக ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் பெற்றதாக எழுந்துள்ள புகார், தமிழக அரசு மருத்துவமனைகளில் புரையோடியிருக்கும் லஞ்ச வேட்டையை படம் பிடித்துக் காட்டுகிறது. ஏழை எளியோரின் உடல்நலத்தைக் காக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உட்கட்டமைப்புகள் எவ்வளவு அவசியமானதோ, அதற்கு ஈடாக லஞ்சமோ, கட்டணக் கொள்ளையோ, தவறான சிகிச்சை முறையோ இல்லாமலிருப்பதும் அவசியம்.
எனவே, ஓர் அப்பாவி உயிரைப் பறித்த இந்தக் கொடூர சம்பவத்தை உடனடியாக விசாரித்து, தவறிழைத்தோர் மீது சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மேலும் தமிழக அரசு மருத்துவமனைகளில் லஞ்ச லாவண்யமற்ற, தரமான சிகிச்சை அனைவருக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.